நீண்ட காலமாக இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் உடுத்திவந்த கருப்பு அங்கிக்குப் பதிலாக புதிய வண்ணத்தில் விரைவில் அங்கிகள் மாற்றப்படும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக வழக்கு விசாரணைகள் நடந்துவந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நீதிமன்றம் திரும்பியுள்ளனர். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நேற்று முன்தினம் முதல் நேரில் வந்து வழக்குகளை விசாரித்து வரும் நிலையில், வாதி, பிரதிவாதிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கருப்பு நிற ஆடை, வைரஸ்களை எளிதில் கவரும் என்பதால் நீதிபதிகளும், வழக்கறிஞர்கள் அங்கியின் நிறத்தை மாற்ற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, "நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கருப்புநிற கோட் அல்லது மேலங்கியைத் தவிர்ப்பது நல்லது. கருப்புநிற ஆடைகள், வைரஸ்களை எளிதில் கவரும் என்று தெரியவந்துள்ளது. இனி நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.