குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், குஜராத் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாதம் ரம்ஜான் மாதம் என்பதால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்களும் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சுற்றி எந்த மசூதியும் இல்லாத காரணத்தினால், விடுதியில் தங்கி இருக்கும் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், விடுதியில் ஓர் இடத்தில் கூடி தொழுகை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 16ஆம் தேதி இரவு இஸ்லாம் வகுப்பைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் விடுதியில் தொழுகை நடத்தினர். அப்போது, அங்கு வந்த சுமார் 25 பேர் அடங்கிய கும்பல், தொழுகை நடத்தி கொண்டிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.
மேலும், வெளிநாட்டு மாணவர்களை நோக்கி, 25 பேர் கொண்ட கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு தாக்குதலில், வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், பல்கலைக்கழக விடுதிக்குள் வருவதற்குள், அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டது.
இதனையடுத்து, காயமடைந்த வெளிநாட்டு மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 25 பேர் கொண்ட கும்பல், விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.