லடாக்கில் அத்துமீறும் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக வடக்கு பிராந்திய ராணுவ கட்டளையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் சீன ராணுவம், இந்திய வீரர்கள் உடனான மோதல் போக்கையும் தொடர்ந்து வருகிறது. இதனிடையே இருநாட்டு ராணுவங்களும் லடாக் எல்லைப்பகுதியில் ஆயுதங்களைக் குவித்து வருகின்றன. இந்நிலையில், சீன ஊடகம் ஒன்றில் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கும் வகையிலான கட்டுரை ஒன்று வெளியானது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள வடக்கு பிராந்திய இந்திய ராணுவ கட்டளையின் செய்தி தொடர்பாளர், "இந்தியா அமைதியை நேசிக்கிற ஒரு நாடு. அதன் அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. இந்தியா எப்போதும் பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது. சீனா எப்போதுமே போர்கள் இன்றி வெல்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். எனவே அவர்கள் போருக்கான சூழ்நிலையை உருவாக்கினால், அவர்கள் சிறந்த பயிற்சி பெற்ற, சிறந்த முறையில் தயார்படுத்தப்பட்ட, முழுமையாக ஓய்வு பெற்ற, உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களைச் சந்திப்பார்கள்.
கிழக்கு லடாக்கில் சீனாவுக்கு எதிராக முழு அளவிலான போருக்கு இந்திய ராணுவம் தயாராக உள்ளது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக போரிடும் இந்திய வீரர்களுடன் ஒப்பிடும்போது, சீன துருப்புகள் பெரும்பாலும் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கள நிலைமைகளின் கஷ்டங்களை, நீண்ட கால பயன்படுத்தல் அனுபவங்களைப் பெறாதவர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.