சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவியுள்ளது. சுமார் 17,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், 425 க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர்.
இந்த கரோனா வைரஸ் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பெரும்பாலானவை சீனாவுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ள சூழலில், வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் சீன மக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தது. அதேபோல கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு சென்று திரும்பிய வெளிநாட்டினருக்கு இந்திய விசா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனர்களுக்கான இ-விசாக்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது என கடந்த இரண்டாம் தேதி மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.