இங்கிலாந்து நாட்டில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்தநாட்டில் புதிய வகை கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. புதிய வகை கரோனா பரவலைத் தொடர்ந்து, தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் நகரில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய வகை கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என அந்தநாடு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய அரசு, இங்கிலாந்து விமானங்கள் இன்று இரவு 11.59 மணியிலிருந்து வரும் 31 ஆம் தேதி இரவு வரை இந்தியாவிற்கு வரத் தடை விதித்துள்ளது. மேலும் இன்று இரவு வரை, இந்தியா வரும் இங்கிலாந்து பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், நேற்று இரவு இங்கிலாந்து நாட்டின் லண்டனிலிருந்து இந்தியா வந்த 266 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஐவருக்கும், இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கரோனா பாதித்துள்ளதா என ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.