பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரான்சில் 33 ஆவது ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாக 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று அபாரப்படுத்தியுள்ளார். இதனால் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் நேரடியாக மூன்றாம் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மனு பாக்கர், இன்று நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் மனு பாக்கருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.