டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டனர். அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், இஸ்ரோவின் தொழில்நுட்ப பிரிவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். ரஷ்யா மற்றும் அதன் அருகிலுள்ள நாடுகளின் விண்வெளி அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து அந்த பிரிவு செயல்படும் என்று குறிப்பிட்டார். விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்புக்காக பொலிவியா அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் கடந்த மார்ச் மாதம் இஸ்ரோ செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30- யிலிருந்து 33 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கான மானியத்தை 20% வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் உயர்த்தப்பட்ட 20% உர மானியத்திற்காக ரூபாய் 22,875 கோடி ஒதுக்கவும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.