உலகில் மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் முதல் இரண்டு நாடுகளாக முறையே சீனாவும், இந்தியாவும் இருந்துவருகின்றன. இருப்பினும், 2027 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகையை இந்தியா தாண்டிவிடும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்திருந்தது. இந்தநிலையில், அதற்கு முன்பாகவே சீனாவின் மக்கள் தொகையை இந்தியா தாண்டக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
10 வருடங்களுக்குப் பிறகு தங்கள் நாட்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை தற்போது சீனா வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 141 கோடியே 18 லட்சமாகும். அதேநேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை, கடந்த ஆண்டு இந்திய மக்கள் தொகை 138 கோடி என மதிப்பிட்டிருந்தது. அந்த எண்ணிக்கைக்கும், சீனாவின் தற்போதைய மக்கள் தொகைக்கும் 1.5 சதவீதமே வித்தியாசமாகும்.
இந்தநிலையில் சீனாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின்படி, அந்தநாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 2000 முதல் 2010 வரை 0.57 சதவீதமாக இருந்த அந்த நாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், தற்போது 0.53 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், சீன மக்கள் தொகையில் 7 கோடி மட்டுமே அதிகரித்திருக்கிறது.
அதேசமயம், இந்தியாவில் தற்போது தாய்மார்கள் கருவுறுதல் வீதம் 2.3 சதவீதமாக இருக்கிறது. இவற்றை வைத்துப் பார்க்கையில், ஐக்கிய நாடுகள் சபை கணித்ததற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2025 ஆண்டிற்குள்ளேயே இந்திய மக்கள் தொகை சீனாவை விஞ்சிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.