இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐந்துநாட்கள் பயணமாக வரும் 24ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு அவர் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளரோடு ஆலோசனை நடத்துவதோடு, இந்திய - அமெரிக்க உறவினைக் கையாளும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாரையும் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திக்கலாம் என கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் கோவிட் தொடர்பான ஒத்துழைப்பு தொடர்பாக தொழிற்கூட்டமைப்புகளுடன் இரண்டு சந்திப்புகளை வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, உலக நாடுகளுடன் 8 கோடி கரோனா தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களோடு ஆலோசனை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.