கால்நடைத்துறை, மீன்வளத்துறையில் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகப்படுத்தும் வகையில் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
காணொளிக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இதில் கால்நடைத்துறை, மீன்வளத்துறையில் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகப்படுத்தும் வகையில் ரூ.20,050 கோடி மதிப்பிலான பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தில் ரூ.12,340 கோடி கடல்சார் திட்டங்களுக்காகவும், ரூ.7,710 கோடி மீன் வளர்ப்பு, மீன்பிடித்தல் முதலீட்டுக்கும், உள்கட்டமைப்புக்கும் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடை வைத்திருப்போருக்கு உதவும் வகையில் இ-கோபாலா எனும் மொபைல் செயலியையும் பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்தார். இதில், கால்நடை வளர்ப்பு, நோய்கள் குறித்து அறிந்து கொள்ளவும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.