கரோனா வைரஸ் தாக்குதல் இன்றளவும் உலகம் முழுவதும் இருந்துவருகிறது. 2ஆம் அலையின்போது ஏற்பட்ட பாதிப்பு சீராக குறைந்துவரும் வேளையில், மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியதையடுத்து உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் இன்றளவும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வாரத்தில் மூன்று நாட்கள் கோயில் திறப்புக்குத் தடை, பொது இடங்களில் கூட்டம் சேர்வதற்கு தடை என பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்துவருகிறது.
இது ஒருபுறம் இருக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போது பிரபலமாக இருக்கும் நபரைக் கொண்டோ, பொருளைக் கொண்டோ அதே பெயரில் வேறு பொருட்கள் வருவது வாடிக்கையாக நடைபெற்றுவரும் சம்பவமாக இருக்கிறது. குஷ்பு இட்லி, நடிகைகளின் பெயர் கொண்ட சேலை என அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப இந்தப் பெயர்கள் மாற்றமடைந்துகொண்டே வருகிறது. அந்த வகையில், தற்போது கரோனா வைரஸை அடிப்படையாகக் கொண்டு சில நகைக்கடைகளில் கரோனா வைரஸ் போன்று தோற்றமளிக்கும் காதணிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7.8 கிராம் எடையும் இந்தக் காதணிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்துவருவதாகவும் தனியார் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.