உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்பது குறித்து நேற்றிரவு பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை நடைபெற்ற சிறிது நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஷ்ய இராணுவ செய்தித் தொடர்பாளர், "எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, உக்ரைனை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் நிறைய பேரை உக்ரைன் அதிகாரிகள் கார்கிவில் வலுக்கட்டாயமாகத் தங்க வைத்துள்ளனர். உண்மையில், அவர்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ரஷ்ய ஆயுதப்படைகள் தயாராக உள்ளன. மேலும், இந்தியா வலியுறுத்தியது போல, ரஷ்யாவிலிருந்து எங்கள் சொந்த இராணுவ போக்குவரத்து விமானங்கள் அல்லது இந்திய விமானங்கள் மூலம் அவர்களை வீட்டிற்கு அனுப்பவும் தயாராக இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.
இராணுவ செய்தியாளரின் இந்த பேட்டி இந்திய பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறைச் செயலர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் அங்குள்ள நமது தூதரகம் தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் உதவியுடன் நேற்று நிறைய இந்திய மாணவர்கள் கார்கிவ்வில் இருந்து வெளியேறினர். இதுவரை இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. எந்த ஒரு மாணவரும் இத்தகைய புகாரைக் கூறவில்லை. கார்கிவ் மற்றும் சில நகரங்களில் இருந்து இந்திய மாணவர்களை நாட்டின் மேற்குப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் உக்ரைன் அதிகாரிகளிடம் வேண்டியுள்ளோம்.
உக்ரைன் அருகில் உள்ள ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா, போலந்து, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்திய மாணவர்களை மீட்கும் பணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். கடந்த சில நாட்களில் நிறைய இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்காக நாங்கள் உக்ரைன் அதிகாரிகளுக்கு நன்றி கூறுகிறோம். அதேபோல், இந்திய மாணவர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள உக்ரைனின் மேற்கு எல்லையை ஒட்டிய அண்டை நாடுகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கருத்தால் பீதியில் ஆழ்ந்திருந்த இந்திய பெற்றோர்களுக்கு இந்திய அமைச்சகத்தின் இந்த விளக்கம் சற்று ஆறுதலைத் தரும் விதமாக அமைந்துள்ளது.
அதேநேரம், உக்ரைனின் பல இடங்களில் வெளியேற முடியாமல் சிக்கித்தவித்து வரும் மாணவர்களை உடனடியாக இந்திய அரசு மீட்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
"துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறார்கள்" - உக்ரைன் ராணுவம் மீது இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டு