
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனாவின் இரண்டாவது அலையால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தைக் கடந்து வந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளாக தினசரி கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நேற்று (11.04.2021) ஒரே நாளில் 1,69,899 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து, ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா உறுதிசெய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும், ஒரே நாளில் கரோனா பாதிக்கப்பட்ட 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 63,294 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேருக்கும், டெல்லியில் 10.774 பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. இந்த மாநிலங்களில் பல்வேறு கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.