இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றியவர் எம்.ஜே அக்பர். இவர் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். இவர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி, தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து எம்.ஜே அக்பர், பிரியா ரமணி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கிலிருந்து பிரியா ரமணியை விடுவித்துள்ளது. மேலும், நீதிமன்றம் தனது தீர்ப்பில், "சமூக அந்தஸ்துள்ள ஒரு மனிதர் கூடப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் ஏற்படுத்துபவராக இருக்கலாம். பாலியல் துஷ்பிரயோகம் கண்ணியத்தையும் தன்னம்பிக்கையையும் பறிக்கிறது. கண்ணியத்தை விலைகொடுத்து நற்பெயருக்கான உரிமையைப் பாதுகாக்க முடியாது. ஒரு பெண் பல தசாப்தங்களுக்குப் பிறகும் தனது குறைகளை முன்வைக்க உரிமையுண்டு" எனக் கூறியுள்ளது.
மேலும் நீதிமன்றம் தனது தீர்ப்பில், சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர் பல ஆண்டுகளாக மன அதிர்ச்சி காரணமாகப் பேசாமால் இருக்கலாம் என்பதை நம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காகப் பெண்ணை தண்டிக்க முடியாது" எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.