72- வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றி வைத்தார்.
சிறப்பு விருந்தினர் இன்றி டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் குடியரசுத் தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கரோனா அச்சுறுத்தலால் 1.25 பேருக்கு பதில் 25,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா அச்சம் காரணமாக, கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டெல்லியில் இந்திய குடியரசுத் தின அணி வகுப்பில் முதன்முறையாக வங்கதேச ராணுவம் பங்கேற்றது. வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அந்நாட்டு ராணுவம் பங்கேற்றது.வங்கதேச ராணுவ கமாண்டர் அபு முகமது ஷாஹ்னூர் ஷாவோன் தலைமையில் 122 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா- வங்கதேசத்திற்கும் இடையே ராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் ஏவுகணைகள் உள்ளிட்டவையும் அணி வகுப்பில் இடம் பெற்றன. மேலும் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மேலும் மாநிலங்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அலங்கார வாகன ஊர்திகள் அணி வகுப்பில் இடம் பெற்றன. அதில் தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் மாதிரியுடன் வாகனம் அணி வகுத்துச் செல்ல பெண்கள் பரத நாட்டியம் ஆடினர்.
குடியரசுத் தினத்தையொட்டி டெல்லியில் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.