நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன் தினம் (13.05.2024) நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், ரேஷன் பொருட்கள் வாங்க வந்த பட்டியலின இளைஞர் மீது போலீசார் நடுரோட்டில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி தொகுதிக்குட்பட்ட பஹோரங்காலா கிராமத்தைச் சேர்ந்தவர் வீரேந்தர் குமார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், அந்தக் கிராமத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் ரேஷன் பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீர் பகதூர் மற்றும் ராம்பல் ஆகிய இருவரும், வீரேந்தர் குமாரை நடுரோட்டில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது அவர்கள், ‘இலவச ரேஷன் மட்டும் வாங்குவீர்கள். ஆனால், அரசாங்கத்திற்கு வாக்களிக்க மாட்டீர்களா’ எனக் கேள்வி வசைபாடி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்த சிலர், தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு உரிமை உள்ளதால் அவர்களுக்கு ரேஷன் கிடைக்கிறது. தானியங்கள் விவசாயிகளால் விளைவிக்கப்படுகின்றன. விநியோகத்திற்காக செலவிடப்படும் பணம் பொதுமக்களுடையது. பா.ஜ.க அரசு பொதுமக்களை பணயக்கைதிகளாக்க விரும்புகிறதா? பா.ஜ.க, குண்டர்களைப் போல நடந்து கொள்ளவும், நமது பட்டியலின சகோதரர்களிடம் இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ளவும் இந்தக் காவல்துறையினருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது?” என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். ரேஷன் வாங்க வந்த பட்டியலின இளைஞர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.