அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது இரண்டு நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று மும்பையில் நடந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மோடி தலைமையிலான பாஜ.க அரசு ஏழைகளிடம் இருந்து பணத்தை திருடிக் கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத வகையில் மோடி அரசு ஊழல் செய்து வருகிறது. மேலும் பாஜகவின் ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்கத்துடன் இணைந்துள்ளன. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று பாஜக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம். ஒன்றுபட்ட இந்தியா வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.