டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் தரப்பில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் 15 ஆம் தேதி (15.04.2024) விசாரிக்க உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்.பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மக்களவை எம்.பி. சஞ்சய் சிங் இன்று (13-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சிறைக்குள், இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சித்திரவதை செய்யப்படுகிறார். அவரது மன உறுதியை உடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறைக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, சிறையில் உள்ளவர்கள், பார்வையாளர்களை நேருக்கு நேர் சந்திக்க சிறை நிர்வாகம் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில், அவரை நேரில் சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி இல்லை. இன்று, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் நடைபெறுகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியலமைப்பு ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், சிறை விதிகளின்படியும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்டுக் கொள்கிறேன். சர்வாதிகாரியாக இருக்க முயற்சிக்காதீர்கள்.
அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க, அவரது மனைவி விண்ணப்பித்தபோது, அவரை நேரில் சந்திக்க முடியாது, ஜன்னல் வழியாக மட்டுமே சந்திக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஏன் இப்படி மனிதாபிமானமற்ற நடத்தை?. இந்த மனிதாபிமானமற்ற செயல் முதல்வரை அவமானப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் செய்யப்பட்டுள்ளது. நான் முழுப் பொறுப்புடன் சொல்கிறேன், பயங்கரமான குற்றவாளிகள் கூட பாராக்கில் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்தவர் தனது மனைவியை ஜன்னல் வழியாக சந்திக்க அனுமதிக்கப்படுகிறார். ஒரு மாநில முதல்வருக்கு இந்த நிலையா?” என்று கூறினார்.