Skip to main content

எந்தளவிற்கு நியாயமானது? - மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மருத்துவ சங்கம் சரமாரி கேள்வி?

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

HARSHAVARDHAN

 

உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் 'கொரோனில்' என்ற மருந்தை அறிமுகம் செய்தது. இது கரோனாவை குணமாக்கும் எனச் செய்யப்பட்ட விளம்பரம் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், இந்த மருந்து கரோனாவை குணமாக்கும் என்பதற்கான சமர்ப்பிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்கள் குறித்தும் சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து மத்திய ஆயுஷ் அமைச்சகம், இந்த மருந்து கரோனாவை குணமாக்கும் எனக் கூறி விளம்பரம் செய்யத் தடைவிதித்தது.

 

அதன்பிறகு இந்த மருந்தை கொரோனில் கிட் என்ற பெயரில், பதஞ்சலி நிறுவனம் கடந்த 19 ஆம் தேதி மறு அறிமுகம் செய்தது. இதில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் ஹர்ஷவர்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில், இந்த கரோனில் கிட் தொடர்பாக ஆய்வுக்கட்டுரை வெளியிட உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது எனக் கூறியது பதஞ்சலி. ஆனால், இதனை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 

இந்தநிலையில், இந்த மருந்து அறிமுக விழாவில், கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு இந்திய மருத்துவ சங்கம் சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் நெறிமுறையின்படி, எந்தவொரு மருத்துவரும் எந்த மருந்தையும் ஊக்குவிக்க முடியாது. இருப்பினும், ஒரு நவீன மருத்துவரான சுகாதார அமைச்சர் இந்த மருந்தை ஊக்குவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது எனக் கூறியுள்ளது.

 

மேலும் நாட்டின் சுகாதார அமைச்சராக இருந்துகொண்டு, இதுபோன்ற பொய்யான, புனையப்பட்ட, அறிவியலற்ற தயாரிப்பை முழு நாட்டு மக்களுக்கும் வெளியிடுவது எந்தளவிற்கு நியாயமானது? இந்த கரோனாவுக்கு எதிரான மருந்து எனச் சொல்லப்படும் இந்த மருந்தின் சோதனை காலம் எவ்வளவு எனவும் இந்திய மருத்துவ சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது. இந்திய மருத்துவ சங்கம், இதுதொடர்பாக விளக்கமளிக்கக் கோரி இந்திய மருத்துவக் கழகத்திற்கும் கடிதம் எழுதப்போவதாகக் கூறியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்