உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியில் ஐஐடி பனராஸ் இந்து பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர், தனது சக மாணவனுடன் கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பல்கலைக்கழகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் துப்பாக்கி முனையில் மாணவனை மிரட்டி சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர், அந்த மாணவியையும் அந்த கும்பல் தாக்கி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், மாணவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அதை தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்துள்ளனர். அதன் பின்னர், அந்த 3 பேரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த அந்த 3 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் தொடர் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் போலீசார் நேற்று (31-12-23) கைது செய்தனர். கைது செய்த குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கைது செய்யப்பட்ட 3 பேரும், குனல் பாண்டே, அபிஷேக் சவுகான், சக்ஷன் பட்டேல் என்பதும் அவர்கள் அனைவரும் பா.ஜ.க நிர்வாகிகள் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் 3 பேரும் வாரணாசி பா.ஜ.க ஐ.டி பிரிவு நிர்வாகிகளாகச் செயல்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.