வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வெளியேறுங்கள் மோடி! - விவசாயிகள் கூட்டமைப்பு
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் வெளியேறிவிடுங்கள் என பெங்களூருவில் விவசாயிகள் நடத்திய பேரணியில் தெரிவித்துள்ளனர்.
கிசான் முக்தி யாத்ரா எனப்படும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தும் தேசிய அளவிலான பேரணி அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த பேரணி கடந்த ஜூலைமாதம் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் உள்ள 175க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இதில் பங்குபெற்றுள்ளன. இதன் ஒருபகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய பேரணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.சிங், ‘சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்கப்போவதில்லை என மோடி தெரிவித்துள்ளார். பின்னெதற்காக அவர் வாக்குறுதியளித்தார்? வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் இல்லையென்றால் அதிகாரத்திலிருந்து வெளியேறுங்கள் மோடி என்பதை வலியுறுத்தியே இந்த பேரணி நடந்துகொண்டிருக்கிறது’ என்றார்.
பேரணியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சியால் கர்நாடக மாநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாலும், அரசு கண்டுகொள்ளவில்லை என்பதாலும் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இயற்கையோடு சேர்ந்து அரசு நிர்ணயிக்கும் விலையும் தங்களை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- ச.ப.மதிவாணன்