கேஜிஎப் 2 திரைப்படத்தின் வெற்றி குறித்து கன்னட நடிகர் சுதீப் பேசும்போது, “கன்னட படத்தை இந்தியா முழுவதுக்குமான படமாக எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அவ்வாறு சொல்வது சரியில்லை. இந்தி நமது தேசிய மொழி இல்லை. பாலிவுட்டில் எடுக்கப்படும் படங்கள் தெலுங்கு, தமிழில் வெளியிடப்படுகின்றன. அவை வெற்றி பெறுவதற்காக போராடுகின்றன” என்று தெரிவித்தார்.
இதற்கு பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் எப்போதும் நமது தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்” என்று பதிவிட்டார். இது பெரிய சர்ச்சையானது.
இந்நிலையில், உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், “நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்படுவர். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள்” என்று தெரிவித்திருந்தார். தற்போது இதற்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலத்தவரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.