
கேரளாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாவது நாளாக இன்று கேரளாவில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அம்மாநிலத்தில் 32,801 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரளா அரசு, கரோனாவை சரியாக கையாளவில்லை என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்தநிலையில் கேரளாவில் கரோனா பரவல் குறித்து கட்சி இதழில் கட்டுரை எழுதியுள்ள அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கரோனா நிலை தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த சில பிரிவுகள் முயலுவதாக விமர்சித்துள்ளார்.
பினராயி விஜயன் தனது கட்டுரையில், "கரோனவை கட்டுப்படுத்துவதில் கேரளா மாடல் தவறாக இருந்தால், நாம் வேறு எந்த மாடலை பின்பற்ற வேண்டும்? ஆக்சிஜன் பற்றாக்குறையால் கேரளாவில் யாரும் இறக்கவில்லை. எந்தவொரு நபரும் மருத்துவ உதவி இன்றியோ, மருத்துவ படுக்கை இன்றியோ இல்லை." என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "சிலர் உண்மைகளை புறக்கணிக்க முயற்சிப்பதோடு, வேண்டுமென்றே குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இரண்டாவது அலையைச் சுற்றி சில தேவையற்ற சர்ச்சைகள் உள்ளன. இந்த இரண்டாவது அலையில், கரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் இருப்பதை கவலைக்குரியதாகச் சித்தரிப்பதன் மூலம் சிலர் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். நாட்டில் நடத்தப்பட்ட 3 சீரோபிரேவலன்ஸ் ஆய்வுகளிலும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா என தெரியவந்துள்ளது. நாங்கள் தடுப்பூசியின் ஒரு சொட்டை கூட வீணாக்கவில்லை மேலும் வெற்றிகரமாக கூடுதல் டோஸ்களை செலுத்தியுள்ளோம்" என கூறியுள்ளார்.