புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி நடைபெற உள்ளது.இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. நேற்று (07/10/2019) 45 ரோடு சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முதலமைச்சர் நாராயணசாமி, கட்சி தலைவர் நமச்சிவாயம், வேட்பாளர் ஜான்குமார் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய அளவு உள்ள நீரை கொடுத்தது போக மீதமுள்ள நீரை தடுத்து நிறுத்த இந்த அணை கட்டப்போவதாக கர்நாடக அரசு தெரிவிக்கிறது. ஆனால் இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பாதகமான அமையும். இது குறித்து நீதிமன்றத்தை நாடி அதன் மூலம் தடுத்து நிறுத்துவாம்” என்றார்.
அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம், “வரும் 17- ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்க்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தொகுதி மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற முனைப்புடன் உள்ளனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்” என தெரிவித்தார்.