இந்தியாவில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திய கரோனா டெல்லியையும் கடுமையாகப் பாதித்தது. இதனையடுத்து கரோனவைக் கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் முதற்கட்டமாக ஆறுநாள் ஊரடங்கை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்பிறகு இந்த ஊரடங்கு படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. தற்போதும் டெல்லியில் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துவருகிறது. நேற்று (27.05.2021) 1,100 பேருக்கே கரோனா உறுதியானது. அதுமட்டுமன்றி கரோனா உறுதியாகும் சதவீதம் 1.5 ஆக குறைந்துள்ளது. இதனையொட்டி திங்கட்கிழமை முதல் (மே 31) டெல்லியில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அன்றாடம் ஊதியம் பெறும் தொழிலாளர்களை மனதில் கொண்டு, கட்டுமானத்துறை மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு முதற்கட்ட தளர்வுகள் அளிக்கப்படும் என கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஒருவேளை மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்தால், தளர்வுகள் நிறுத்திவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.