தமிழக எல்லையில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டி மதுபாட்டில்களைப் பறித்துச் சென்றதாகப் புதுச்சேரி மாநில போலீஸார் மூவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக- புதுச்சேரி எல்லை பகுதியான விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குச் சென்ற புதுச்சேரி காவலர்கள் மணிகண்டன், கோகுல், பிரசன்னா, செல்வம் ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை மிரட்டி, அவர்கள் குடிப்பதற்காக வாங்கி வந்து வைத்திருந்த மதுபாட்டில்களைப் பறித்துக்கொண்டு, அவர்களை விரட்டி அடித்ததனர்.
இதுபற்றிய புகார் புதுச்சேரி காவல்துறை தலைமையகத்திற்குப் புகார் சென்றது. அதையடுத்து காவல்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் காவலர்கள் 4 பேரும் தவறாக நடந்திருப்பதும், மதுபாட்டில்களைத் தங்களது சொந்த தேவைக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4 காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உத்தரவிட்டார்.
மேலும் 4 பேர் மீது திருக்கனூர் போலீசார் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர். பின்பு அவர்கள் கரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்தவுடன், 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் காவலர் பிரசன்னாவை போலீசார் தேடி வருகின்றனர்.