வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் காசிப்பூர் பகுதிகளில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் பங்கேற்று பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசியதாவது,
மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டத்திற்கு விரோதமாக விவசாயிகளுக்கு விரோதமான விவசாய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதனைக் கைவிட வலியுறுத்தி இந்தியா முழுமையிலும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் நடக்கிற போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். இதற்குத் தமிழகத்தில் இருந்து விவசாயிகள் சார்பாக ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கே நான் வந்திருக்கிறேன். மோடி அதானிக்கும் அம்பானிக்கும் போராடுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கிறார். காந்தி பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தைப் பறிகொடுக்கப் போராடுகிறார்.
ஆனால் விவசாயிகள் நடத்துவது 120 கோடி மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம். அரசியலமைப்புச் சட்டத்தையும் காந்தி பெற்ற சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக போராட்டம் நடத்துகிறோம்.
குமரி முதல் காஷ்மீர் வரை ஒட்டுமொத்த இந்திய மக்களும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். போராட்டம் வெற்றி பெறும். இந்தப் போராட்டத்தை நடத்துகிற உங்களுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த தமிழகமும் போராடிக் கொண்டிருக்கிறது. ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய அரசு மாநில அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராடி வருகிறோம். தொடர் போராட்டங்களில் 60 தினங்களாக ஈடுபட்டு வருகிறோம்.
அதேநேரத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பாரேயானால் இந்தச் சட்டத்திற்கு ஆதரவளித்திருக்கமாட்டார். ஆனால் அவரது மறைவையொட்டி முதல்வரான எடப்பாடி பழனிசாமி சுயநலத்திற்காக இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு மற்றும் ஆளுகிற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி ஆதரித்தது. இதற்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன். இதற்காக தமிழக விவசாயிகள் சார்பில் உங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். சட்டத்தைக் கைவிட்டு மக்களுக்காக மோடி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் மோடியை மாற்றுவதற்கு இந்திய விவசாயிகள் தயாராகி விட்டார்கள் என நான் எச்சரிக்க விரும்புகிறேன்.
தமிழகத்தில் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்தும், டிராக்டர் பேரணிக்கு காவல்துறையைக் கொண்டு தடுக்கவும் அரசு முயற்சிக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என்றார்.
இவருடன் திருவாரூர் மாவட்டச் செயலாளர் சரவணன், மதுரை மாவட்டச் செயலாளர் மேலூர் அருண், முன்னணி நிர்வாகிகள் சுதா, தர்மலிங்கம், தவமணி, கணேசன், நாகை சபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.