அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியதோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதன் காரணமாக அரசு சார்பில் வெள்ள சேத நிவாரணங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை அந்த நிவாரணத் தொகை வழங்கப்படாத நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து காரைக்காலைச் சேர்ந்த நபர் ஒருவர், “வெள்ள சேத நிவாரணம் எப்போது வரும்” எனக் கேட்டுள்ளார். அதற்கு ரங்கசாமி பதிலளிப்பதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், ''ஐயா நிவாரண நிதி போடறதா சொல்லியிருந்தீங்க. இதுவர வரவேயில்லை ஐயா...'' என கேட்க, ''அது நான் மட்டும் ராஜாவா இருந்தா பரவாயில்லப்பா... நான் ராஜா கிடையாது... மந்திரிங்க எல்லாம் இருக்காங்க... எனக்கு மேல இருக்காங்க... கீழ இருக்காங்க... இது பாண்டிசேரி, அப்படித்தான் இருக்கும்'' என பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.