கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் மனித வெடிகுண்டாக மாறி கணவன், மனைவியைக் கொன்றிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. மிசோரம் மாநிலம், லுங்க்லேய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோமிங்கிலினா (62). இவருடைய மனைவி பை லாங்தியாங்லிமி (61), ரோமிங்கிலினாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில், லாங்தியாங்லிமி தனது முதல் கணவர் மூலமாக பிறந்த மகளுடன் சேர்ந்து காய்கறி கடை நடத்திவருகிறார்.
தன்னைப் பிரிந்து சென்ற மனைவியைக் கொலை செய்ய முயற்சி செய்த ரோமிங்கிலினா நேற்று முன்தினம் (05.10.2021) நள்ளிரவு தனது மனைவியின் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு தனக்கு காய்ச்சல் அடிப்பதாக மனைவியிடம் கூறி உள்ளூரில் தயாரிக்கப்படும் பீடி ஒன்றை சுருட்டித் தரும்படி கேட்டுள்ளார். யாங்லிமியும் பரிதாபப்பட்டு, பீடி சுற்றிக் கொடுத்தார். பீடியைப் பற்ற வைத்த ரோமிங்கிலினா, தலை சுற்றுவதாக கூறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக யாங்லிமியை கட்டிப்பிடித்து உருண்டார். திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், “ரோமிலிங்கிலினா, தனது உடம்பில் ஜெல்லட்டின் வெடிபொருள் குச்சிகளைக் கட்டிச் சென்றுள்ளார். மனைவியைக் கட்டிப்பிடித்ததும் பீடி நெருப்பின் மூலம் அவற்றை வெடிக்கச் செய்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்றனர்.