குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு அதிகமான வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அதேபோல், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில, யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், மாநில, யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவைச் செயலாளரும், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிசி மோடி, "பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு 2,824 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். வாக்குகளின் மதிப்பு 6,76,803 ஆகும். பதிவான 4,754 வாக்குகளில் 53 வாக்குகள் செல்லாதவை. எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா 1,877 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். வாக்குகளின் மதிப்பு 3,80,177 ஆகும். இதனால் சுமார் 2,96,626 வாக்குகளின் மதிப்பு வித்தியாசத்தில் திரௌபதி முர்மு வெற்றிப் பெற்றுள்ளார்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள திரௌபதி முர்மு இல்லத்திற்கு நேரில் சென்ற தேர்தல் அதிகாரி, அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.