இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லி, மஹாராஷ்ட்ரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.
இந்தநிலையில் நேற்று பிரதமர் மோடி ஆந்திரா, தெலங்கனா, ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் நிலவவும் கரோனா நிலை குறித்து அம்மாநில முதல்வர்களுடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடினார்.
பின்னர், இந்த உரையாடல் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார். அந்த டீவீட்டில் ஹேமந்த் சோரன், "இன்று மரியாதைக்குரிய பிரதமர் என்னை அழைத்தார். அவர் தனது மனதில் உள்ளதை மட்டுமே பேசினார். பயனுள்ள எதையாவது பேசியிருந்தால், நான் பேசுவதைக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" எனத் தெரிவித்திருந்தார். ஹேமந்த் சோரனின் இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசியுள்ள ஜார்க்கண்ட் மாநில அரசுத்துறை வட்டாரங்கள், பிரதமருடனான ஆலோசனையின்போது, தனது கவலைகள் குறித்து பேச ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அனுமதிக்கப்படவில்லை என்றும், அதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.