மதுக்கடைகளில் கூட்டநெரிசலைத் தவிர்க்க வழிசெய்யும் வகையில், மதுபானங்களை வீட்டிற்கே சென்று ஹோம் டெலிவரி செய்ய சத்தீஸ்கர் அரசு முடிவெடுத்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது ஒருசில இடங்களில் இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்ட்ரா, கர்நாடகா, டெல்லி மற்றும் அசாமில் மதுக் கடைகளைத் திறக்க அம்மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இதனால் இந்த மாநிலங்களில் கடத்த இரு நாட்களாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே மது பிரியர்கள் வரிசையில் காத்து நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், அடித்து பிடித்துக்கொண்டு மக்கள் மதுவை வாங்கிச் செல்கின்றனர். இதனால் கரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தச் சிக்கலைத் தீர்க்க, மதுபானங்களை வீட்டிற்கே சென்று ஹோம் டெலிவரி செய்ய சத்தீஸ்கர் அரசு முடிவெடுத்துள்ளது. கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மண்டலங்களில் உள்ள மக்கள் ஆன்லைன் வாயிலாகத் தங்களுக்குத் தேவையான மதுவை ஆர்டர் செய்தால், வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவர் அதிகபட்சமாக ஐந்து லிட்டர் வரை ஆர்டர் செய்யலாம் எனவும், டெலிவரி கட்டணமாக 120 ரூபாய் செலுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.