![tyjty](http://image.nakkheeran.in/cdn/farfuture/LkRyz0hreTxynXfh0eIrjrUs4wgUl-04Z__0qdCcpQw/1547729760/sites/default/files/inline-images/vw-std.jpg)
தேசிய பசுமை தீர்ப்பாயமானது, ஜேர்மன் கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் 100 கோடி ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் கார்கள் சுற்றுசூழலை பாதிக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடை அதிகளவில் வெளியிடுகிறது எனவும் அதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது எனவும் அந்நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க கடந்த நவம்பர் மாதம் 4 பேர் கொண்ட அமர்வு ஒன்று அமைக்கப்பட்டது. அப்பொழுது வழங்கப்பட்ட தீர்ப்பில் அந்த நிறுவனத்திற்கு 171 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதன் அடுத்தகட்டமாக ஓர் அறிவிப்பை அந்த அமர்வு இன்று வெளியிட்டுள்ளது. அதில், நாளை மாலை 5 மணிக்குள் 100 கோடி ரூபாய் வைப்புதொகையை செலுத்தவில்லை என்றால் சுற்றுசூழல் மாசு ஏற்படுத்திய குற்றத்திற்காக கடும் தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. ஒருவேளை இந்த தொகையை சரியான நேரத்தில் செலுத்த தவறும் பட்சத்தில், இந்தியாவில் உள்ள அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்படுவதோடு, அதன் இந்திய நாட்டிற்கான தலைவர் கைது செய்யப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாசு அளவை கண்டறிய அரசு சார்பில் நடத்தப்படும் சோதனையின்போது மாசு அளவை குறைத்து காட்டும்படியான கருவிகள் காரில் பொறுத்தப்பட்டிருந்ததாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.