பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2020-2021 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் ஆகிய மூன்று நோக்கங்களின் அடிப்படையில் இந்த பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பட்ஜெட்டில் மிகமுக்கிய விஷயமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று வருமான வரி சலுகைகள். மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார் போல மத்திய அரசு வருமான வரி சலுகைகளை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தனிநபர் வருமானத்தில் 5 லட்ச ரூபாய் வரை பெறுவோர், வருமான வரி கட்டத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற வருவாய் பிரிவினருக்கும் வரிவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் இனி 10 சதவீதமும், 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பெறுவோர் 15 சதவீதமும், 12.5 லட்ச ரூபாய் வரை பெறுவோர் 20 வருமான வரி செலுத்தினால் போதும். 15 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோருக்கான வருமான வரியில் 30 சதவீதம் என்ற பழைய நிலையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.