ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 21ஆம் தேதி சிம்லாவில் உள்ள சிஐடி காவல்துறையின் தலைமையகத்தில் இணையவழி குற்றப் பிரிவு நிலையத்தை, முதல்வர் சுக்விந்தர் சிங் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, முதல்வர் சுக்விந்தர் சிங் சாப்பிடுவதற்காக, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்த சமோசாக்கள், கேக் உள்ளிட்ட திண்பண்டங்கள் வரவழைக்கப்பட்டன. அப்போது, அந்த சிற்றுண்டியை முதல்வருக்கு வழங்காமல், அவருடைய பாதுகாவலர்களுக்கு வழங்கியதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து சிஐடி விசாரணைக்கு, மாநில அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. அதன்படி, சிஐடி விசாரித்து, இந்த விவகாரம் மாநில அரசுக்கு எதிரானது என்று அறிக்கை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்த சிங் சுகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதிகாரிகளின் தவறான நடத்தை கண்டறிவதற்கு தான் விசாரணை நடத்தப்பட்டது. ஊடகங்கள் சித்தரிப்பது போல் சமோசாக்கள் வழங்கப்படாததற்கு சிஐடி விசாரணைக்கு உத்தரவிடவில்லை. இது தொடர்பாக டிஜிபி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். ‘ஆபரேஷன் தாமரை’ தோல்வியடைந்ததால், எனது அரசை கவிழ்க்க பா.ஜ.கவினர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் எனக்கு எதிரான பாஜகவின் தாக்குதல் என்பது குழந்தைத்தனமான உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் இருந்து, என் மீது அரசு மீதும் பா.ஜ.க அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறது” என்று கூறினார்.