2022-2023 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று (31/01/2022) காலை 11.00 மணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
நாடாளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது, "சமுதாயத்தில் சமநிலை இருக்க வேண்டும் என அம்பேத்கரின் எண்ணத்தை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. நேரடி மானியம் மூலம் ஏழைகள் பணம் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. கரோனா கட்டுப்பாடுகளால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்குத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் 33 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பேரிடர் ஏற்பட்ட பொழுதெல்லாம் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் சரியான காலத்தில் வழங்கப்பட்டது. சிறு விவசாயிகளுக்கு உதவுவதே மத்திய அரசின் திட்டங்களின் நோக்கம். மத்திய அரசு அமைத்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் விவசாயிகளுக்கு பெரிய உதவியை வழங்கியுள்ளது. சிறு தானியங்களை உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' திட்டம் பெண்கள் முன்னேற வழிவகை செய்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் பெரும் சவால்களைச் சந்தித்து வந்த முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க அதிக கவனம் செலுத்தி வருகின்றன. 'ஸ்டார்ட் அப்' திட்டங்கள் இந்தியாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 'ஸ்டார்ட் அப்' திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் இந்தியா தற்போது உலகளவில் முதன்மையான இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் இருக்கின்றன. சிறு, குறு, தொழில்துறையினர் சரியான காலத்தில் சரியான நிதிகளைப் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்கிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் 13 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலனடைந்துள்ளன. அலைபேசி உருவாக்கும் முக்கியமான மையங்களில் இந்தியாவும் உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ளது. உள்நாட்டு கட்டமைப்பு மேம்படுத்துதல் முழு அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதால், அனைத்து துறைகளும் வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளன" என்றார்.
நாட்டின் கல்வித் திட்டங்கள் குறித்து பேசும்போது 'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி குடியரசுத்தலைவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.