இணையதள வேலைகளை எளிதாக்குவது முதல் அனைத்து விதமான சேவைகளையும் விரைவாக பெற உதவும், 5ஜி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. 2023- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 83.5 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறும் நிலையில், 5ஜி தொழில் நுட்பத்திற்கான தேவையை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
ஐந்தாம் தலைமுறைக்கான அலைவரிசையை அடிப்படையாகக் கொண்ட இணைய தொழில்நுட்பமே 5ஜி. இது முந்தைய 4ஜி எனப்படும் நான்காவது தலைமுறைக்கான தொழில்நுட்பத்தைவிட பன்மடங்கு வேகத்துடன் கூடிய பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றத்தைக் கொண்டிருக்கும். அதாவது, 3ஜி, 4ஜி கால்வாய் நீர் போன்றது என்றால், 5ஜி அதிகமாக வெள்ளம் ஓடும் ஆறுபோல இருக்கும்.
உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு 47.5 Mbps வேகம் கிடைக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 11.5Mbps வேகம் இருப்பதாகவும், சர்வதேச இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7 Gbps பதிவிறக்க வேகமும், 3 Gbps பதிவேற்ற வேகமும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
5ஜி தொழில்நுட்பத்தில் பெரிய கோப்புகளை ஒரு நொடியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். எந்தவொரு திரைப்படத்தையும் ஒரு சில நொடிகளில் அதிவேகத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். போக்குவரத்து, விவசாயம், சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, தளவாடம் ஆகியவற்றில் வளர்ச்சியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி, விளையாட்டு, பொழுதுபோக்குச் சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் செயல்களின் பயன்பாட்டை அதிகரிக்கும். 5ஜி, கிளவுட் கம்பியூட்டிங், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.