டெல்லி சுல்தான் புரி பகுதியில் புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் உடலில் காயங்களுடன் இளம்பெண்ணின் உடல் சாலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து அங்குச் சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு மங்கோல்புரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விபத்துக்குக் காரணமான காரை பறிமுதல் செய்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், காரில் ஐந்து பேர் இருந்ததும், அவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. மேலும் அப்பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்துவந்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்பது உறுதியானது.
இந்நிலையில், அப்பெண்ணுடன் ஸ்கூட்டரில் வந்த அவரது தோழி நிதி செய்தியாளர்களிடம் பேசும் போது, "உயிரிழந்த எனது தோழி குடிபோதையில் இருந்தார். நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஸ்கூட்டரை ஓட்டுவதாகப் பிடிவாதமாக இருந்து வண்டியை ஓட்டிச் சென்றார். எங்கள் மீது பின்னால் வந்த கார் மோதிய போது நான் ஒரு பக்கம் விழுந்து விட்டேன். எனது தோழி காரின் அடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். காரின் அடியில் ஒரு பெண் சிக்கி இருப்பது காரில் வந்தவர்களுக்குத் தெரியும். அதிர்ச்சியில் இருந்த நான் இது பற்றி யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தாயார் செய்தியாளர்களிடம் பேசும் போது, "காரில் இருந்த ஐந்து பேரையும் தூக்கிலிட வேண்டும். அதுவே எங்கள் விருப்பம்" என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.