கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே இருக்கும் மலைக் கிராமத்தில் அதிகாலை மூன்று மணி அளவில் பயங்கர நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிக்கியுள்ளனர்.
கேரளா மாநிலம், இடுக்கி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழைப் பொழிவு இருந்துவருகிறது. இதில், இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், இடுக்கி மாவட்டம், தொடுபுழா எனும் பகுதி அருகே இருக்கும் ஒரு மலைக் கிராமத்தில் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் பயங்கர நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிக்கியுள்ளனர். மேலும், நிலச் சரிவுடன் வெள்ளம் அடித்துவரப்பட்டதால், ஐந்து பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் தொடபுழா தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அப்பகுதி மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஐந்து நபர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமியை சடலமாக தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். மற்றவர்களையும் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.