கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பல கட்டடங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தொழில்துறைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள், பாதிப்புகள் ஒருபுறமிருக்க, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பல தரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்று வருகிறது.
குறிப்பாக உச்சநீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்குச் செல்வதும், அப்படி செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், உயிர் இழப்புகள் போன்றவை அனைத்தும் கரோனா நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் தோல்வியையே காட்டுகிறது என கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.
இப்படியான நிலையில் கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்த சம்பவமும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் இருந்து வீடு திரும்ப முயன்ற புலம்பெயர் தொழிலாளர்களில் பெண் ஒருவர் ரயில்நிலைய நடைமேடையிலேயே இறந்து கிடக்க, தாய் இறந்ததை கூட அறியாமல் குழந்தை தாயின் மீது போடப்பட்டிருந்த போர்வையை விலக்கி எழுப்ப முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியையும், காண்போர் நெஞ்சையும் கணக்கவைக்கிறது.
குஜராத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பீகார் நோக்கி சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் குழுவில் பெண்மணி ஒருவர் உணவு இல்லாத நிலையில் ரயில் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்து இறந்ததாக அந்தப் பெண்மணியுடன் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்த பெண்ணின் குழந்தை, தாய் இறந்ததை கூட அறியாமல் தட்டி எழுப்பும் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.