புதுச்சேரி உருவையாறு கிராமத்தை சேர்ந்த வீரபுத்திரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் இருந்து வாட்ஸ் அப் வழியாக உங்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் சொல்கின்ற டாஸ்க்கை நீங்கள் முடித்தால் உங்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என்று ஒரு நபர் அறிமுகமாகிறார்.
மேலும் 'நாங்கள் அனுப்புகின்ற யூடியூப் சேனலை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் மற்றும் வீடியோக்களுக்கு லைக் போட வேண்டும்' என்றும் அவர் கூறுகிறார். 'நீங்கள் லைக் போடுகின்ற ஒவ்வொரு வீடியோவிற்கும் உங்களுக்கு 150 ரூபாய் பணம் வழங்குவோம்' என்றும் கூறுகிறார். மேலும் 'இதை வாட்ஸ் அப் மூலமாக செய்ய முடியாது. உங்களுக்கு ஒரு டெலிகிராம் லிங்க் அனுப்புகிறோம். அதில் இணைந்து கொள்ளுங்கள்' என்று ஒரு டெலிகிராம் லிங்க் அனுப்புகின்றனர்.
வீரபத்திரன் அந்த டெலிகிராம் லிங்கில் இணைந்தவுடன் ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகு அவர்கள் அனுப்பிய வீடியோக்களையும் லிங்குகளையும் அவர்கள் சொன்னது போல் செய்து அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அவர்களுக்கு அனுப்பிய உடன் அதற்குண்டான பணத்தை அனுப்பி விடுகின்றனர். இதேபோல் நீங்கள் முதலீடு செய்து இந்த லிங்க்கை வாங்கினால் உங்களுக்கு நிறைய பணம் வரும் என்று ஆசை வார்த்தை கூறவே இவரும் 7 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து நிறைய வீடியோ மற்றும் லிங்குகளை வாங்கி சப்ஸ்கிரைப் செய்து வீடியோக்களுக்கு லைக் போட்டு அதன்மூலம் அவருக்கு 12 லட்சம் ரூபாய் அவர் சம்பாதித்ததாக காட்டியது.
பின்னர், வீரபத்திரன் பணத்தை எடுக்க முயற்சி செய்த போது உங்களுடைய லிங்க் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் நீங்கள் அனுப்பிய பார் கோடுகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று காலம் தாழ்த்தி அதற்காகவும் சில லட்சம் பணத்தை நீங்கள் செலுத்தினால் உங்கள் பணத்தை கொடுப்போம் என்று மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பிக் கொண்டிருந்தவர், கடந்த சில நாட்களாகவே அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இன்று புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அது சம்பந்தமாக சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
இது சம்பந்தமாக இணையவழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் கூறுகையில், "புதுச்சேரியில் மட்டும் மாதத்திற்கு சராசரியாக 3.5 கோடி ரூபாய் அளவிற்கு இணைய வழி மோசடியில் பொதுமக்கள் பணத்தை இழக்கின்றனர். முக்கியமாக பேராசைப்படுவதே பொதுமக்கள் பணத்தை இழப்பதற்கு காரணமாகும். பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவது டெலிகிராம் செயலியில் வருகின்ற அதிக லாபம் தருகிறோம் என்பதை நம்பி பொதுமக்கள் மோசடிக்காரர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி ஏமாந்து விடுகின்றனர். பொதுமக்கள் டெலிகிராம் செயலியில் வருகின்ற எந்த ஒரு முதலீட்டு அழைப்பையும் மேற்கொள்ள வேண்டாம் என இணைய வழி காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கை செய்கிறது.
மேலும், ஒரு மொபைல் எண்ணிற்கு 15க்கும் மேற்பட்ட டெலிகிராம் கணக்கை உருவாக்க முடியும் என்பதால் டெலிகிராம் செயலியை அவ்வளவு எளிதில் யார் உபயோகப்படுத்தினார்கள். எந்த நாட்டில் இருந்து உபயோகப்படுத்துகிறார்கள் என்பது கண்டுபிடிக்க மிகுந்த தாமதம் ஆவதை தெரிந்து கொண்ட இணையவழி மோசடிக்காரர்கள் பெரும்பாலும் டெலிகிராம் செயலியை உபயோகப்படுத்துகின்றனர். ஆகவே பொதுமக்கள் டெலிகிராம் செயலியில் வருகின்ற எந்த ஒரு முதலீட்டு அழைப்பையும் ஏற்க வேண்டாம். அதில் வருகின்ற முதலீட்டு அழைப்பை நம்பி பணம் செலுத்திய அனைவருமே ஏமாற்றப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.