ஹரியான மாநிலத்திற்கு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மொத்தம் 90 தொகுதிகள் உள்ள ஹரியான மாநிலத்தை நயாப் சிங் சனி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் பாஜகவை வீழ்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சியும் காய் நகர்த்தி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியும் ஹரியான மாநிலச் சட்டசபைத் தேர்தலில் களம் காணவுள்ளது.
மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து செயல்பட்ட நிலையில், ஹரியானாவிலும், கூட்டணியா? அல்லது தனித்தா? என்று இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி 10 தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் 7 தொகுதிகள்தான் காங்கிரஸ் கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 90 தொகுதிகளில் 66 தொகுதிகளுக்கு வேட்பாளரை காங்கிரஸ் முடிவு செய்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள தொகுதிகளில் இருந்தே ஆம் ஆத்மி கட்சிக்கு இடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரம் கூறுகிறது.
இது ஒருபுறமிருக்க, ஆளும் பாஜகவில் உட்கட்சி பூசல் எழும்பியுள்ளது. ஹரியான மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 67 பேர்கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், தற்போது மாநில எரிசக்தித் துறை அமைச்சராக இருக்கும் ரஞ்சித் சிங் சௌதாலாவின் பெயர் இடம்பெறாததால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளார். முன்னாள் துணைப் பிரதமரான தேவி லாலின் மகனான ரஞ்சித் சிங் சௌதாலா, ராணியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் போட்டியிட தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித் சிங் சௌதாலா, தற்போது பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார். அதேபோன்று முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலில் பெயர் அறிவிக்கப்படாததால் எம்.எல்.ஏ. லக்ஷ்மன் தாஸ் நபா, கட்சியின் ஓ.பி.சி. பிரிவு தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். இதில் எம்.எல்.ஏ லக்ஷ்மன் தாஸ் நபா டெல்லி சென்று தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.