Skip to main content

எங்களைக் கொல்வதால் என்ன லாபம்? - காதல் ஜோடியின் உருக்கமான வீடியோ

Published on 19/07/2018 | Edited on 20/07/2018

காதல் எந்த எல்லைகளிலும் அடங்காத ஒப்பற்ற உணர்வு. இதைத்தான் காலங்காலமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது காதல் அதன் அழகிய வடிவிலேயே. ஆனால், சாதிகளாலும், மதங்களாலும் பிரிந்து கிடக்கும் இந்திய சமூகத்தில் காதல் சுதந்திரமான ஒன்றாக இருப்பதில்லை. காதலிப்பவர்களை, தடைகளைக் கடந்து மணமுடிந்தவர்களை இந்த சமூகத்தின் கறை நிறைந்த பக்கங்கள் சும்மா விடுவதில்லை. 
 

Harrison

 

 

 

கேரள மாநிலத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட கெவின் என்ற இளைஞர், பெண்ணின் பெற்றோர்களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெவின் படுகொலை ஏற்படுத்திய தாக்கம் குறையாத நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மதங்களைக் கடந்து திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி கொலை மிரட்டல்களைச் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

 

 

ஹாரிஸன் எனும் கிறித்தவ இளைஞரும், சஹானா எனும் இஸ்லாமிய இளம்பெண்ணும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இவர்கள், முகநூல் பக்கத்தில் மணக்கோலத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, சில அடிப்படைவாத அமைப்புகள் இந்த ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால், அச்சமடைந்த இவர்கள் செய்வதறியாமல் முகநூலில் தங்களது கவலையை முகநூல் பக்கத்தில் வீடியோ காட்சியாக பதிவிட்டுள்ளனர். 
 

kevin

கேரளாவில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கெவின்

 

 

உருக்கமான அந்த வீடியோ காட்சியில், நாங்கள் சாவதற்காக காதலித்து திருமணம் செய்யவில்லை. எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்புகள் எங்களை மிரட்டுகின்றன. நாங்கள் சேர்ந்து வாழவே விரும்புகிறோம். மதம் மாறும் எண்ணம் எங்கள் இருவருக்கும் கிடையாது. இருவரும் வற்புறுத்தவும் இல்லை. அப்படி இருக்கையில், எங்களைக் கொல்லப்போவதாக மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம். எல்லாவற்றையும் கடந்து காதலித்து திருமணம் செய்துகொண்ட எங்களைக் கொல்வதால் உங்களுக்கு என்ன லாபம்? என கேள்வியெழுப்பியுள்ளனர். 
 

வீடியோவின் முடிவில் ஹாரிஸன், எங்கள் காதலை நிலைத்திருக்கச் செய்ய நாங்கள் வாழவே ஆசைப்படுகிறோம். கெவினைப் போல சாக எங்களுக்கு விருப்பமில்லை என குறிப்பிடுகிறார். அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

சார்ந்த செய்திகள்