அமெரிக்க பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் வெற்றிகரமாக பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிறுவனம் சர்வதேச அளவில் 116 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது.
க்ளாசிக் பைக்குகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வரும் ஹார்லி டேவிட்சன் 10-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தியாவுக்காக புதிதாக இரண்டு பைக்குகளையும் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டு நிறைவு விழா குறித்து ஹார்லி டேவிட்சனின் இந்திய இயக்குநர் மேலாளர் சஜீவ் ராகசேகரன், “ இருசக்கர வாகன உலகில் ஹார்லி டேவிட்சன், இந்தியாவினுள் பலமான அடியை எடுத்துவைத்தது. பைக் பிரியர்களின் விருப்பமாக இருந்து வரும் எங்கள் ஹார்லி டேவிட்சனுக்கு 10 ஆண்டுகள் என்பது புதிய பாதைக்கான தொடக்கமாகவே இருக்கும். எங்களது விநியோகிஸ்தர்கள், வாடிக்கையாளர்கள், ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
புதிதாக 2020-ம் ஆண்டு 1250 அட்வென்சர் டூரிங் மாடல் மற்றும் 975cc ஸ்ட்ரீட்ஃபைட்டர் ஆகிய இரண்டு புதிய பைக்குகள் அறிமுகம் ஆக உள்ளது எனவும் அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்சன், பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிப்ரவரி 18-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு ரைடர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஹார்லி டேவிட்சனை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுவருகிறது.