மாணவர்கள் எழுதும் பல்கலைக்கழகத்திற்கான தேர்விற்கு வழங்கப்படும் ஹால் டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்காக மூன்று கல்லூரிகளில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
தேர்விற்கு வழங்கப்படும் ஹால் டிக்கெட்டுகளுக்கான விவரங்களை மாணவர்கள் இணையத்தின் வழியே பதிவேற்ற அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தேர்விற்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில் சில மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் பிரதமர் மோடி போன்றோரின் படங்கள் இடம் பெற்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வுக்கான விவரங்களை மாணவர்களே பதிவேற்றம் செய்ததாகவும், சில மாணவர்களின் செயலால் இது போல் நடந்துள்ளதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் புகைப்படம் மாறியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.