காங்கிரஸ் கட்சியின் நியமன தலைவருக்கு ஒரு சதவீத ஆதரவு கூட கிடைக்காது எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பு குறித்த குழப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், காரியக் குழுவுக்குத் தேர்தல் நடத்தி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத் உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பேட்டியளித்துள்ள குலாம் நபி ஆசாத், "எனது கட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க விரும்பினால், கட்சிக்குள் தேர்தல் தேவையில்லை. காங்கிரஸ் கட்சி மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள், காரியக் குழுவுக்குத் தேர்தல் நடத்தி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முன்மொழிவை வரவேற்பார்கள். காங்கிரஸைச் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் மாற்றுவதே ஒரே நோக்கம்.
அதற்காகவே காரியக் குழுவுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். தேர்தலில் போட்டியிட்டு தேர்வாகும் போதுதான், குறைந்தபட்சம் 51 சதவீத கட்சியினராவது உங்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆனால், நியமிக்கப்படும் தலைவருக்கு ஒரு சதவீத ஆதரவு கூட கிடைக்காது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதில் என்ன சிக்கல் உள்ளது? இப்போது எங்களை எதிர்ப்பவர்கள், கட்சித் தேர்தல் நடைபெற்றால் காணாமல் போய்விடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.