குஜராத் மாநில சட்டமன்ற சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, சட்டமேதை அம்பேத்கரை பிராமணர் என அழைத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நேற்று ‘மெகா பிராமணர் வர்த்தக மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, ‘சட்டமேதை அம்பேத்கரை ஒரு பிராமணர் என்று அழைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. படித்த ஒருவரை பிராமணர் என்று அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடியும் பிராமணர்தான் என்று நான் சொல்வேன்’ என பேசியிருந்தார். இவரது இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சட்டமேதை அம்பேத்கர் தலித் சமுதாயத்தில் பிறந்து, அதனால் பல்வேறு இன்னல்களையும், தீண்டாமைக் கொடுமைகளையும் சந்தித்தவர். மேலும், அந்தக் கொடுமைகளில் இருந்து ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெறவேண்டும் எனக்கூறிய அவர், அதற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார்.
1936ஆம் ஆண்டு, மே 30, 31 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கர், ‘சதுர்வர்ணம் அழிக்கப்பட வேண்டும். பார்ப்பன மதம் வேரறுக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகுமா? இல்லையெனில், இந்து மதத்தில் இருந்துகொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன்மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறுமா? ஒருபோதும் வெற்றிபெறாது. மதம் மாறுவதைத் தவிர சிறந்த வழி என வேறெதுவும் இல்லை’ என பேசியதும், தனது மரணத்திற்கு முன்பாக லட்சக்கணக்கான மக்களுடன் இணைந்து புத்த மதத்தைத் தழுவியதும் இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது.