குஜராத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதேபோல் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 151 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 7 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல் இமாச்சலப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 35 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இமாச்சலப்பிரதேசத்தில் கடினமான சூழல் காரணமாக தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. குஜராத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி பாஜகவினர் முன்னிலையில் உரை நிகழ்த்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1995 முதல் குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.