Skip to main content

ஜிபிஎஸ் சிப்புகளுக்கு அஞ்சி ரூ.2.3 லட்சம் சில்லரைகளை மட்டும் திருடிய கொள்ளையர்கள்!

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
ஜிபிஎஸ் சிப்புகளுக்கு அஞ்சி ரூ.2.3 லட்சம் சில்லரைகளை மட்டும் திருடிய கொள்ளையர்கள்!

வங்கியில் திருட வந்த திருடர்கள் ஜிபிஎஸ் சிப்புகளுக்கு பயந்து நாணயங்களாக திருடிய சம்பவம் ஒரே சமயத்தில் வேடிக்கையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் முகர்ஜி நகரில் உள்ளது சிண்டிகேட் வங்கியின் கிளை. இந்த வங்கியின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மூன்று திருடர்கள், அங்கு இருந்த ரூ.2.3 லட்சத்தைத் திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் ரூபாய் நோட்டுகளை அப்படியே விட்டுவிட்டு, 46 பாலிதீன் பைகளில் இருந்த ரூ.5, ரூ.10 நாணயங்களைத் திருடிச் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அந்த திருடர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வங்கியின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வேலை செய்து வருபவர்கள் என்றும், திருடிய பணத்தை உணவு மற்றும் மதுவுக்காக பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏன் சில்லரையை மட்டும் திருடினீர்கள் என்ற கேள்விக்கு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளில் ஜிபிஎஸ் சிப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சேட்டிலைட்டுகளால் கண்டுபிடிக்கப்படுவோம் என்ற அச்சத்தால்தான் ரூபாய் நோட்டுகளை எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிப் தகவல்கள் வதந்தியாக இருப்பினும், அதை நம்பி ரூபாய் நோட்டுகளை விட்டுச்சென்ற கொள்ளையர்களின் விளக்கம் வேடிக்கையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்