இந்தியாவில் கரோனா இரண்டவாது அலையின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது. இருப்பினும் நாட்டில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். கரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே தீர்வாக கருதப்படுகிறது.
அதேநேரத்தில் நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களும், தேவைக்கேற்ப தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாமல் தடுமாறி வருகின்றனர். இந்தநிலையில் இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் ஜாதவ், தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பாக மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹீல் ஹெல்த் என்ற சுகாதார ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு தளம் ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சுரேஷ் ஜாதவ், இந்தியா உலகசுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அதன்படி தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அவர், "முதலில் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதாக இருந்தது. அதற்கு 600 கோடி தடுப்பூசிகள் தேவைப்பட்டது. ஆனால் நாம் அந்த இலக்கை எட்டுவதற்குள்ளயே, தேவையான தடுப்பூசிகள் இல்லை என நன்கு தெரிந்திருந்தும் 45 வயதுக்கு மேலான அனைவருக்கும், அதைத்தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கும் தடுப்பூசி திட்டத்தை தொடங்கப்பட்டது. அதுதான் நாம் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடம். பொருட்களின் இருப்பை எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.